
சேரான் தெரு...
கடந்த டிசம்பர் மாதம் விடுப்பில் ஊருக்கு சென்ற சமயம் ஒரு காலைப் பொழுதில் கீழக்கரை பழைய மீன்கடைக்கு சேரான் தெருவை கடந்து செல்லும் தருனத்தில் இது சேரான் தெருவா? சேரன் தெருவா? என்ற குழப்பமான வினா ஒன்று மனதை குடைந்தது, யாஸீனிடம் “ எப்படி இந்த பேரு வந்துச்சு..... எனக் கேட்டேன்...
அடப் போப்பா.. உனக்கு இதே பொழப்பா போச்சு... என்றவன்... சீக்கிரம் வா... நல்ல கனவாவுலாம் 11 மனிக்கே வித்துப்போயிடும்.... என்றான்.
சின்னக்கடையிலிருந்து மீன்கடைக்கு உள்ள தூரம் அரைக்கிலோ மீட்டருக்கும் மிக குறைவானதுதான் ஆனால் கருப்பட்டிக்கார தெரு, பச்சிலை தெரு, எஸ். என் தெரு, லெப்பை தெரு , சேரான் தெரு, பிரபுக்கள் தெரு என ஏகப்பட்ட தெருக்களை கடந்துதான் மீன்கடைக்கு வந்தடைய முடியும். மத்திய காலத்தில் உழைப்பையும் , தொழிலையும் அடிப்படையாக கொண்டு மக்கள் குழுக்களை மையப்படுத்தி கீழக்கரையின் தெருக்கள் அமைந்திருக்கலாம். குறுகிய தெருக்களும், நெருக்கமான சந்துக்களுமே கீழக்கரையின் புரதான தெருக்களின் அமைப்பாக நாம் அறிகிறோம். வாணிபத்துக்காக 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கீழக்கரைக்கு வந்ததாக சொல்லப்படும் அரேபியர்களால் கூட இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம், மொராக்கோ தேசத்தில் இன்றும் கீழக்கரையை ஒத்த தெருக்கள் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சரித்திர பின்னனியை இந்த உலகத்துக்கு பறை சாற்றும் இது போன்ற அமைப்பிலான என்னற்ற தெருக்களை கொண்ட கீழக்கரையில் அமைந்திருக்கும் ஒரு தெருவின் பெயர்தான் சேரான் தெரு. வள்ளல் சீதக்காதி பிறந்த பிரபுக்கள் தெருப்பகுதியில், மின்ஹாஜியார் பள்ளியை ஒட்டிய , கடற்கரை பள்ளியை நோக்கிய சாலையை உள்ளடக்கிய ஒரு குடியிருப்பு. கீழக்கரையின் புரதான தெருக்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது..
1000 ஆண்டுகளை கடந்த கடற்கரைபள்ளியை ஒட்டிய இந்த குடியிருப்பு பகுதியில்தான் அரபு நாட்டில் இருந்து வந்த வர்த்தகர்கள் வசித்து வந்ததாகவும் என்ன முடிகிறது, துறைமுகத்தை ஒட்டிய, பண்டக சாலைகள் நிறைந்த இப்பகுதி அரபுக்களின் வர்த்தக வாழ்வுக்கு வசதியான பகுதியாக இருந்திருக்கலாம்.
சேரன் தெரு என்பது ஏன் சேரான் தெரு என்பதாக மருவியிருக்க கூடாது? இருக்கலாம்..... ஆனால் சோழப்பேரரசின் செம்பியன் மாதேவியின் ஆட்சிக்கு கீழ் செம்பி நாடாக 12 ஆம் நூற்றான்றில் அறியப்பட்ட கீழக்கரையில் சேரன் பெயரை சூட்ட காரணம் ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. மேற்கு கரையான சேரநாட்டு (கேரளா) சாமுத்திரிகள் எவரும் தெற்கு கரையான இந்த பட்டினத்தில் வந்து ஆட்சிபலம் கொண்டதாக வரலாறும் இல்லை, எனினும் சேரான் தெரு பென்களின் செழித்த வீரத்தை கீழக்கரையின் வேறு எந்த தெருவிலும் பார்க்க முடியாது..
சேரநாட்டில் ஒரே இஸ்லாமிய சமஸ்தானமான மலப்புரத்தை உள்ளடக்கிய கண்ணனூரை தலைநகராக கொண்ட அரக்கல் ராஜ்ய இளவரசி ஆயிசா அலிராஜா வின் வீரத்தினை ”உறுமி” என்ற மலையாள திரைப்படத்தில் கண்டு விக்கித்துப்போனேன். ஓளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் இயக்கத்தில், அரக்கல் ஆயிஷாவாக நடிகை ஜெனிலியா டி சூசாவால் ஆயிஷா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு மனதை கவர்ந்தது.. போர்ச்சிகியர்கள், இந்து மகா சமுத்திரத்தின் தங்களின் வைஸ்ராயான வாஸ்கோடா காமாவின் தலைமையில் மேற்கு கடற்பகுதியை முழுதும் ஆக்கிரமித்து கேரள முஸ்லீம்களுக்கு இன்னல்கள் விளைவித்த போது வீரமங்கையான அரக்கல் ஆயிசா அவர்களை எதிர்த்து போராடிய வீர வரலாற்றினை இந்த திரைப்படத்தில் காண முடியும், போர்ச்சுகர்களின் இந்திய தலைமை கட்டளை தளமான கோவாவை சேர்ந்தவர்தான் நடிகை ஜெனிலியா! இவர் போர்ச்சுகீசிய பூர்வீகத்தினராக கூட இருக்கலாம்... அவர் அரக்கல் ஆய்ஷாவாக .................என்ன ஒரு தொடர்பு?
அரக்கல் மகளிரின் தீரம் சேரான் தெரு மகளிருக்கும் இருந்திருக்கலாம், மன்னார் வளைகுடாக பகுதியை டச்சுக்காரர்கள் ஆக்கிரமித்த போது சேதுபதி அரசரால் இந்த பகுதிக்கு ரீஜண்ட் ஆக நியமிக்கபட்ட வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் படையில் இது போன்ற வீரமங்கை யாராவது இருந்தனரா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எது எப்படி இருப்பினும் சேரான் தெரு என்ற பெயரிடப்பட சேர மன்னர்கள் காரனமாக இருந்திருக்க முடியாது என்பது உறுதியாகிறது.. பின் எப்படி?
கீழக்கரையின் வடக்குப்பகுதிக்கும் தெற்குப்பகுதிக்கும் கடல்மட்ட உயர வேறுபாடுகள் இருப்பது யாவரும் அறிந்ததே.. வடக்குத் தெரு மனல்மேட்டில் இருந்து தெற்கு நோக்கிய நீண்ட தெருவில் சளைக்காமல் நடந்து வந்தால் 18 வாலிபர் தர்காவை அடையளாம், ஆனால் ஒரு சிறு குன்றின் மீது இறங்கி அடிவாரத்தை அடைவது போன்றே தோன்றும். என் பால்ய்காலத்தில் இவ்வாறு நடந்து வரும்பொழுது மலையிறங்கி வருவது போல் உணர்ந்து இருக்கிறேன்.அப்பொழுதெல்லாம், மனல்மேடு மலைமேல் இருக்கும் மிக உயரமான பிரதேசமாகவே எனக்கு தெரிந்தது, இன்றைய நிலை வேறு.
அரபு நாடான ஏமன், மொராக்கோ, சவுதி போன்ற தேசத்தை சேர்ந்த சன்னி முஸ்லீம் பிரிவினர் வந்து குடியேறிய பகுதியாக கீழக்கரை தெற்கு கோடியில் கடலை ஒட்டிய தாழ்வான பகுதியான தற்போதைய பழைய குத்பா பள்ளி தெரு, நடுத்தெரு, மேலத் தெரு, பண்ணாட்டார் தெரு, சேரான் தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி இருந்திருகிறது.. அது போல வடக்குக் கோடியான இன்றைய வடக்குத் தெருவை சார்ந்த மனல்மேடான பகுதிகளில் இஸ்லாமிய ஷியா பிரிவை சார்ந்த பாரசீக (ஈரான் தேசத்தவர்)த்தை சார்ந்த சூஃபிக்களும் , தர்வேஸ்களும் வந்து தங்கும் நந்தவனமாக இருந்திருக்கிறது..
பாரசீக சூஃபி ஞாநிகளின் வழிவந்தவர்கள் சிலர் நம்மால் கண்டு கொள்ளப்படாமல் கீழக்கரையின் சூஃபி வாழ்வியலின் எச்சங்களாக இன்றும் தொடர்ந்து தஃப்ஸ் அடிக்கும் பக்கீர்களாக வடக்குத் தெரு பகுதிகளில் வாழ்ந்து வருவதை கானலாம். 14 நூற்றாண்டில் பாரசீக (ஈரான்) தேசத்தின், சூஃபி ஞானிகள் நிறைந்த நிசாப்பூரில் இருந்து இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பர்பான்கி மாவட்டத்தில் கிந்தூர் என்ற பகுதிக்கு வந்த நிசாப்பூரி சயீத் சகோதரர்களான செய்யது ஷராஃபுதீன் நிசாப்பூரி மற்றும் செய்யது முகம்மது நிசாப்பூரி ஆகியோரில் இளையவரான செய்யது முகம்மது அவர்கள் ஏராளமான தர்வேஷ்களுடன் கீழக்கரை பகுதியில் தங்கி மெய்ஞான தியானத்தில் இருந்து இருக்கிறார். அச்சமயம் ”பத்தன்” என்ற கீழக்கரைக்கு வருகை புரிந்த மொராக்கோவை சேர்ந்த தேசதூர பயனி இபுனு பதூதா சூஃபி ஞானி செய்யது முகம்மது நிசாப்பூரியை 30 தர்வேஸ்களுடன் ஞான நிலையில் கண்டதாகவும் அவர் சிஙகமும், மானும் ஒரு சேர வளர்த்து வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் வசீயத்துக்கு கட்டுப்பட்ட சிங்கமும் அவர்களுடன் ஒன்றாகவே உனவு உண்டதாகவும் கூறப்படுகிறது.. இறைத்தூதரின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வழிவந்தவர்களாகவும், ஷியாக்களின் இமாமாகவும் கருதப்படும் செய்யது முகம்மது நிசாப்பூரி அவர்கள்தான் வடக்குத் தெரு பள்ளியில் அடங்கப்படிருக்கும் மகான் சேகப்பா அவர்கள் என வரலாற்று ஆய்வாளர் ச.சி. நெ. அப்துல் ஹக்கீம் தெரிவிக்கிறார்.
சமீப காலம் வரை முஹர்ரம் மாதம் 10 இல் ஆசுரா நாள் அன்று கீழக்கரை மனல் மேட்டில் ஷியா முஸ்லீம்களின் சடங்குகளான தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் கைவிரல்கள், கண் போன்றவைகளை வெள்ளியில் செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பது என அனைத்தும் வடக்குத் தெரு பகுதிகளில் நடைபெற்று வந்ததை நாம் அறிவோம். இன்று தவ்ஹீது கொள்கையின் எழுச்சியில் இந்த நிகழ்ச்சிகள் புதைந்து போயிருக்கிறது..
மொத்த கீழக்கரை மக்களும் அன்றைய சன்னிப் பிரிவினரும் கூட ஆசுரா தினத்தினை கொண்டாடிய தருனத்தில் இதெல்லாம் அனாச்சாரம் என கொடிபிடித்து இந்த சடங்குகளில் சேரமாட்டோம் என தீரத்துடன் போராடி ஒதுங்கிய ஒரு மக்கள் குழு வாழ்ந்த பகுதி சேராதவன் தெரு என ஒதுக்கப்பட்டது, அந்த தெருதான் ”சேரான் தெரு” என்று மருவியதை அறிவீர்களா?
Allah bless you
ReplyDelete