
கும்பகோணம்: உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் புனித ஜார்ஜ் கோட்டை, பழவேற்காடு ஏரி, செட்டிநாடு பங்களாக்கள், கழுகுமலைப் பாறைச் சிற்பங்கள், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்டவை தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி ஷெல்ஜா கூறியுள்ளார்.
கும்பகோணம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் கடந்த 2 நாட்களாக தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, சங்கீத மகால், சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டு உள்ளேன். சோழர் காலத்திய சிற்பங்கள் மிகவும் அற்புதமாக இருப்பதை கண்டு வியப்பு அடைந்தேன். அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும்.
சரஸ்வதி மகால் நூலகத்தில் ஏராளமான நூல்கள், குறிப்புகள், ஓலைச்சுவடிகள் உள்ளன. இந்த பொக்கிஷம் மதிப்பிட முடியாததாகும். இவற்றை மேலும் பாதுகாப்பதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடஇந்திய, கிழக்கிந்திய கோவில்களை காட்டிலும் தென்னிந்திய கோவில்கள் பல்வேறு சிறப்புகளை கொண்டு உள்ளன. சென்னை புனித ஜார்ஜ்கோட்டை, பழவேற்காடு ஏரி, ஸ்ரீரங்கம் கோவில், செட்டிநாடு பங்களா, கழுகுமலை பாறை சிற்பங்கள் ஆகியவற்றை உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்க யுனெஸ்கோவால் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதற்காக தற்காலிக பட்டியலில் அவை இருக்கின்றன.
தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் கோவில்கள் போன்று திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்களின் கட்டமைப்புகள் ஒரே மாதிரி இருப்பதால் இதுகுறித்து முன்மொழிவுகள், கருத்துருக்கள் வந்தால் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தென்னகத்தின் கும்பமேளா என போற்றப்படும் கும்பகோணம் மகாமக குளத்தில் பலர் துணிகளை துவைப்பது, படுக்கை பாய்களை துவைப்பது என குளத்தை அசுத்தப்படுத்தி வருகின்றனர். புனிதமான குளத்தை அசுத்தம் செய்ய கூடாது. அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து மகாமக குளத்தின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்.
திரிபுவனத்தில் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டு சேலைகள் மிகவும் அற்புதமாக உள்ளன. அதேபோல் சுவாமிமலையில் வடிவமைக்கப்படும் ஐம்பொன் சிலைகள் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் பெருமை பெற்று விளங்குகின்றன. இத்தகைய கலை, கலாசாரங்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment