Tuesday, 24 July 2012

30 வருடங்களாக அன்னமிடும் கைகள்!

AddThis Social Bookmark Button

சென்னை மேற்கு முகப்பேரில் பிரம்மாண்ட பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.
அந்த கோயிலுக்கு அருகில் ஒரு சைவ மெஸ் இருக்கிறது. அங்கே சாப்பிட்டுப் பாருங்கள், வீட்டில் அம்மா கையில் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். இப்படித்தான் வாய்வழியாகவே இந்த மெஸ் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதோடு அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பினரையும் சுண்டியிழுத்து வருகிறது.

மெஸ்-க்கு இன்று வரை ஒரு பெயர் இல்லை. பெருமாள் கோயில் பக்கத்து மெஸ்தான் இதன் அடையாளம். குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்றமாதிரியான குளுகுளு கூரைக்குக் கீழ்தான் உணவு சாப்பிடும் இடம். இதன் உரிமையாளர், சமையல் காரர், பரிமாறுபவர், கல்லாக் கட்டுபவர் என்று எல்லாமே ஒன் மேன் ஆர்மி போல ஒன் மேன் ஷோதான். அந்த ஒன் மேன் நபர்தான் கிருபானந்தன்.

இவரின் நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்குப் பழகிப் போன ஒன்று என்றாலும் புதிதாக செல்பவர்களுக்கு கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். வாடிக்கையாளர்கள் அனாவசியமாக ஏன், அவசியமாகக் கூட வாயைத் திறக்கமாட்டார்கள். அவ்வளவு அமைதியாக சாப்பிடும் வேலை மட்டுமே நடக்கும். ஒருவேளை இது கிருபானந்தனின் அருமையான உணவு ருசிக்கு அவர்கள் தரும் மரியாதையோ என்னவோ...
 
காலை 9 மணிக்குள் காலை உணவு முடிந்து விடும், மதியம் 2 மணிக்குள் மதிய உணவு முடிந்து விடும். அதற்குமேல் கிருபானந்தனிடம் பேச்சுக்கெல்லாம் இடமில்லை. வெளியில் கைகழுவ என்று வைத்திருக்கும் தண்ணீர் நிரம்பிய பக்கெட், உள்ளே வந்தால் சாப்பாடு தயார். அது உள்ளே சென்றுவிட்டால் சாப்படு காலி அவ்வளவுதான்.

மதிய உணவுக்கு இதெல்லாம் தயார் என்று போர்டெல்லாம் கிடையாது. வீட்டில் எப்படி உணவுகள் சஸ்பென்சாக இருக்குமோ, அதேசமயம் ருசியாக இருக்குமோ அப்படி ஒரு உணவு உள்ளே சென்றுவிட்டால் உங்களுக்கு உத்திரவாதம். அவ்வளவுதான். இன்று என்ன சாப்பாடு என்றெல்லாம் கூட நீங்கள் கிருபானந்தனிடம் கேட்டுவிட முடியாது. நீங்கள் உட்கார்ந்தால் பொறுமையாக ஒரு விருந்தினருக்குப் பரிமாறுவது போல அன்புடன் பரிமாறுவார்.

உங்கள் இலையில் எது இல்லை என்று நீங்கள் கேட்பதற்குள் அவர் அந்த இல்லாத காய்கறியையோ, சாம்பாரையோ கையில் வைத்துக் கொண்டு நிற்பார். 30 வருடங்களாக மெஸ் நடத்திவருகிற நேரத்தில் இதுவரை ஒரு பொரியல், அவியல் இந்த கடைசி இலைக்கு இல்லை என்கிற நிலை வந்ததில்லை. உணவு தீரும் வரை சாப்பிட வரும் அனைவருக்கும் இலையில் எல்லாமும் இருக்கும். மற்ற உணவகங்கள் போல நேரமாகிவிட்டது, வெறும் அப்பளம் மட்டும்தான் என்கிற கதை எல்லாம் கிருபானந்தனிடம் கிடையாது. இருந்தால் எல்லாம் இருக்கும், இல்லையானால் எதுவும் இல்லை. இவர் சிரித்து நிறைய வாடிக்கையாளர்கள் பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் பரிமாறும்போது இவர் அன்பை உணராதவர்கள் இருக்க மாட்டார்கள். உபசரிப்பில் மனிதர் சாப்பிட வரும் அனைவருக்கும் இன்னொரு அம்மாதான்.

இவர் மனைவி ராதாவும் அப்படித்தான். ஆனால், இவர் பேசியபடி பரிமாறுவார். இவர் முகத்தில் கனிவு சிரிப்பு இரண்டையுமே பார்க்கலாம். கிருபானந்தன் விதிமுறைகளை தனக்குத் தானே கடைப் பிடிப்பவர். பக்கெட் வெளியில் இல்லை, நீங்கள் முன்னமேயே சாப்பிட அமர்ந்து விட்டீர்கள் என்றால், வெளியில் எல்லாம் அனுப்பிவிட மாட்டார். ஆனால், சாப்பாடு தயார் ஆனவுடனதான், இலை போடுவார், லைட், மின்விசிறி எல்லாமே போடுவார். உட்கார்ந்து கொண்டு மின்விசிறி போடுங்கள் என்று சொன்னாலும் கிருபானந்தனிடம் இருந்து பதில் வராது. இப்படி கிருபானந்தனிடம் ஏகப்பட்ட தரமான விஷயங்களை நிச்சயம் நாமும் கடைப் பிடிக்கலாம். சரி, கிருபானந்தன் மெஸில் அப்படி என்னதான் ஸ்பெசல்? இதோ வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

"என்னவோ தெரியலை இங்கு சாப்பிட்டால் வீட்டில் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். சாதம் வீட்டு சாதம் போலவே மிருதுவாக சோடா போன்ற விஷயங்கள் இல்லாமல் ஒரிஜினல் சுவையில் இருக்கும். சாப்பிட்ட திருப்தி இருக்கும். அடுத்த வேலைக்கு சரியான நேரத்தில் வீட்டில் சாப்பிட்டால் ஒருவித ஆரோக்கியப் பசி எடுக்குமே அதுபோல பசி எடுக்கும். அதனால்தான் தேடிவந்து இங்கு சாப்பிடுகிறோம்" என்று சொல்லும் நண்பர்கள் ராஜேஷ், பிரசன்னா இருவருமே ஐ டி யில் வேலை பார்ப்பவர்கள்.

"என்னதான் நிறைய சம்பாதித்தாலும், பெருமைக்கு பெரிய இடங்களில் சாப்பிட்டாலும் காசு போவதும் வியாதி வருவதும்தான் மிச்சம். இங்கு காசும் கம்மி, ஆரோக்கியமும் கிடைக்கிறது" என்பது இவர்கள் இருவரும் கூடுதலாக சொன்ன தகவல்.
  
நக்கீரன், முருகேசன் இருவரும் கம்பெனியில் டர்னர்,பிட்டர் என்று வேலை பார்ப்பவர்கள். இவர்கள் சொல்வது "வீட்டில் இருந்து தனியாக வந்து வேலை பார்க்கிறோம். வெளியில் சாப்பிட்டுக் கட்டுபடியாகாது. அப்படியே கையேந்தி பவன்களில் சாப்பிட்டாலும் ருசி இருக்காது. எங்களை மாதிரி ஆட்களுக்கு இந்த மெஸ் ஒரு வரப் பிரசாதம். விலை ரொம்பக் கம்மி. ஒரு சாப்பாடு 25 ரூபாய்தான். அதுவும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வேறு எங்கேயாவது இப்படிக் கிடைக்குமா என்று தெரியவில்லை. இதுவரை அப்படி நான் கேள்விப் படவில்லை. முதலில் 20 ரூபாய்தான் இருந்தது. இப்போதுதான் 5 ரூபாய் ஏற்றி இருக்கிறார்கள். உண்மையிலேய இந்த மெஸ் இல்லை என்றால் இந்த சென்னையில் நாங்கள் வேலை பார்க்க முடியாது. இந்த மெஸ்க்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்" என்கிறார்கள்.
    தேவேந்திரன், இவர் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருப்பவர். இவர் வீட்டில் சென்று தினம் சாப்பிட்டுவிட்டு கம்பெனி வரவேண்டும் என்றால், கம்பெனியில் பலவேலைகள் தங்கிப் போய்விடும். இவருக்கும் கைகொடுப்பது இந்த மெஸ்தான். "அப்படியே வீட்டு சாப்பாடுதாங்க. வெளியில் சாப்பிட்டால் தேவையில்லாத மசாலாக்கள் தொந்திரவு கொடுக்கும். சாப்பிடும் போதே உணவில் ஒரு திகட்டல் வரும். சாப்பிட்டு முடித்த பின் ஒரு நெஞ்சு எரிச்சல் வரும். அதெல்லாம் இங்கு சாப்பிட்டால் இருக்கவே இருக்காது. வீட்டு சாப்பாட்டின் தரம் இதை விட வேறென்ன சொல்வது" என்கிறார் இவர்.

இளைய சேகர், இவர் கல்லூரியில் படித்துவிட்டு, வேலை தேடி சென்னை வந்திருக்கிறாராம். இவரும் இந்த மெஸின் வாடிக்கையாளர்."இங்கே சாப்பிட்டுவிட்டு வேலை தேடுவது நிறைய சிக்கனமாக செலவாவது போல இருக்கிறது. இங்கு மதியம் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் இரவு சாப்பிடாமல் கூட இருந்து விடலாம். வேலை தேடுபவர்கள் வேறென்ன செய்ய முடியும். இது போல சிக்கன நடவடிக்கைகளை கடைப் பிடித்தால்தான் இங்கு குப்பைக் கொட்டி வேலை கிடைக்கும் வரைப் போராட முடியும்" என்கிறார்.

கிருபானந்தன் நடத்தும் இந்த ஒரு மெஸ் எத்தனை பேருக்கு எப்படியெல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது பாருங்கள். மேலும் இங்கு சமைப்பது கிருபாநந்தனின் 83 வயதான அம்மா ஜெயலக்ஷ்மிதானாம் கூடவே மனைவி ராதாவும், கிருபானந்தனும் அம்மாவுக்கு உதவியாக இருப்பார்களாம்.

ஜெயலக்ஷ்மி அம்மா, கிருபானந்தன், ராதா இவர்கள் மூன்று பேரின் 30 வருட அன்னமிடும் கைகளுக்கு என்ன பரிசு அளிக்கலாம்? இலவசமாக விளம்பரம் கொடுப்பதாக நினைத்துவிடாதீர்கள். ஹோட்டல்களில் வீட்டு சாப்பாடு போல் கிடைப்பது மிக குறைவு. உங்கள் ஊரில், சாப்பாட்டுக்கு எது பெஸ்டு ஹோட்டல்? எனக்கேட்டால், சட்டென மனதுக்குள் ஒரு ஹோட்டல் தோன்றுமல்லவா? அப்படித்தான், இந்த மெஸ்ஸை சுற்றியிருக்கும் பல நூற்றுக்கணக்கானோருக்கு இது ஸ்பெஷல். நீங்கள், சென்னை வாசியா? ஒருமுறை இங்கு வந்து சாப்பிட்டு பாருங்கள். இப்பதிவின் நோக்கம் புரியும்.
- 4தமிழ்மீடியாவுக்காக செவ்வியும் படங்களும் எழில்செல்வி

No comments:

Post a Comment