Monday, 16 July 2012

அணு ஆயுதம் இல்லாத உலகம் உருவாக வேண்டும்: அப்துல் கலாம்

சிம்லா:""அணு ஆயுதம் இல்லா உலகம் உருவாக வேண்டும். அணு ஆயுதப் பரவல் நடக்காமல் தடுப்பதோடு, தற்போதுள்ள அணு ஆயுதங்களை அழிப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு உலக அளவில் நிர்பந்தங்கள் அதிகரிக்க வேண்டும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.

சிம்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:மின்சாரம் தயாரிக்க அணுசக்தி தேவை. ஆனால், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும். உலகில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுதங்களைக் குறைப்பது என, அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் நடக்கும் என, நம்புவோம். அணு ஆயுதம் இல்லாத உலகம் உருவாக வேண்டும். அணு ஆயுதப் பரவல் இனி நடக்காமல் தடுப்பதோடு, தற்போதுள்ள அணு ஆயுதங்களை அழிப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். இதை செய்யும்படி, உலக அளவில் நிர்பந்தங்கள் அதிகரிக்க வேண்டும்.
பசுமை புரட்சி:வரும் 2020ம் ஆண்டில், நம் நாட்டில் உணவு தானியங்களின் தேவை 340 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். அந்தத் தேவையை எதிர்கொள்ள, இரண்டாவது பசுமைப் புரட்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பொருளாதார வளத்தை அடைய, இரண்டாவது சுதந்திரப் போராட்டம் நடக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்காற்றியவர்கள் வழக்கறிஞர்கள். அவர்கள் இந்தப் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரவும் பாடுபட வேண்டும்.சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்னைகளில், பாராட்டத்தக்க தீர்ப்புகள் மூலம் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது

நீதித் துறை. வாகனங்களுக்கு எரிவாயு பயன்படுத்தும்படி உத்தரவிட்டது. டில்லியில் மாசு ஏற்படுத்திய ஆலைகளை, நகருக்கு வெளியே செல்லும்படி உத்தரவிட்டது போன்றவை, நீதித் துறை அளித்த குறிப்பிடத்தக்க தீர்ப்புகள். வாகனங்கள் 30 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. அதனால், இத்தகைய எரிபொருளுக்குமாற்றாக புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிய வேண்டும்.இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.

No comments:

Post a Comment