
இன்று கூகுளில் தெரிவது, அமெரிக்காவின் மிகப்புகழ்பெற்ற பெண் வானூர்தி ஓட்டுனர் அமேலியா மேரி ஏர்கார்ட் டும் அவரது விமானமும் ஆகும்.
1897ம் ஆண்டு ஜூலை 24ம் திகதி பிறந்த அமேலியா மேரி ஏர்கார்ட் (Amelia Earhart) , அமெரிக்காவில் விமானிகளுக்கு என வழங்கப்படும் சிறப்பு மிக்க பறக்கும் சிலுவை (Flying Cross) பெற்ற முதல் பெண்மணியுமாவார். தனது தனி வானூர்தியில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்தமைக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

பெண் விமானிகளுக்கென தொன்னூற்று ஒன்பது எனும் அமைப்பை நிறுவியதில் தூண்டுகோலாக இருந்ததுடன், பெண்களை விமான ஓட்டுனர் துறையில் ஊக்குவித்த அமெரிக்கர்களில் பிரதானமானவராகவும் திகழ்ந்தார். தனது அனுபவங்களை தொகுத்து நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். 1937ம் ஆண்டு உலகை சுற்றி வரும் முயற்சியில், ஏர்காட் மத்திய பசுபிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த போது, ஹௌலாந்து தீவு அருகே தனது விமானத்துடன் காணாமல் போனார்.

அவரது சடலமோ, அல்லது விமானத்தின் உதிரிப்பாகங்களோ கண்டுபிடிக்கப்படாததால், விபத்தில் அவர் மரணமடைந்தாரா என்பது கூட உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் மரணித்ததாக எடுத்துக்கொள்வதாக 1937ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போதும், இன்று வரை அமேலியா பற்றிய மர்மம் தொடர்ந்து வருகிறது.

75 வருடங்களாக அமேலியாவின் விமானத்தின் உதிரிப்பாகங்கள் தேடும் முயற்சி நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் புதிய தேடுதல் முயற்சியும் தொடங்கப்பட்டது. 1937ம் ஆண்டு தற்செயலாக எடுக்கப்பட்ட தீவுப்புகைப்படமொன்றில் தெரியும் கடல் பரப்பில், சிறிய விமானமொன்றின் Landing Gear கடலில் மிதப்பது போல் தெரிகிறது. எனினும் மேரியாவின் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்திலிருந்து இது, பல கி.மீ அப்பால் உள்ளது. எது எவ்வாறாயினும் அமேலியா ஏர்கார்ட்டின் 115வது பிறந்த தினமான இன்றைய நாளை கூகுள் தனது ஹோம்பேச்சில் நினைவுகூர்ந்து சிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment