
தமிழக – கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலும், ஆண்டுக்கு ஒரு முறை சித்ரா பவுர்ணமியன்று அந்தக் கோயிலுக்குச் செல்ல தமிழர்கள் படும் பாடுகளும்தான் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டுக்குள், தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட இன்னுமொரு கண்ணகி கோயில் உள்ளது பலருக்கும் தெரிந்திருக்காது. இந்தக் கோயில் இருப்பது தூத்துக்குடி மாவட்டம் மாறமங்கலம் – கொற்கைக்கு இடையில். வரலாற்றில் நாம் படித்த பாண்டியர்களின் தலைமை துறைமுக நகரமான அதே கொற்கைதான் இது. தூத்துக்குடியிலிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது.. இந்தப் பக்கம் ஏரலிலிருந்து போனால் 5 கிமீ!
இந்த இடத்திலிருந்து கப்பல்களில் பயணித்து கடல் கடந்து போய் வாணிகம் செய்திருக்கிறார்கள் பழந்தமிழர்கள். இங்குள்ள கோயிலில் இருப்பது, தமிழரின் கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் கண்ணகியின் உண்மையான சிலை என்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளைப் பார்த்த கோயில். ரொம்ப ரம்யமான இடம்.

சுற்றிலும் பெரிய குளம்… அதன் முகப்பில் கண்ணகி கோயில், கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய 25-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள குளப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனித எலும்புக் கூடுகள் இருந்தன. அவற்றை கார்பன் டேட்டட் முறையில் ஆய்வு செய்தபோதுதான், அவற்றுக்கு வயது 3000 ஆண்டுகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தக் குளத்தை ஆய்வு செய்த போது, மேலடுக்கில் களிமண்ணும், அதன் அடியில் சாதாரண மண்ணும், கீழடுக்கில் கடல் மணலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குளத்தின் முகப்பிலேயே உள்ளது கண்ணகி கோயில். ரம்மியமான சூழல்… இந்தக் கோயிலிலிருந்து சில சுரங்க வழிகள் கூட இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஒரு சில தங்க நாணயங்களும் கிடைத்ததாகக் கூறுகிறார்கள். அதனால் தொடர்ந்து இங்கே தோண்டிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இதில் உள்ள மணலையும் கொஞ்ச காலம் சுரண்டி எடுத்திருக்கிறார்கள். இப்போது இதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்போதும்கூட முதுமக்கள் தாழிகள் தட்டுப்படுவதாகவும், அவற்றின் பெருமை தெரியாமல் மக்கள் அவற்றை உடைத்துவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் அரசு அருங்காட்சியகம் ஒன்று
கொற்கையில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அது நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது கண்ணகி குளத்தின் பெருமை புரிந்து, மீண்டும் கொற்கைக்கு அரசு அருங்காட்சியகத்தை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து, திடீர் கடைகள் முளைத்து, இருக்கும் அழகை நாறடிக்க வேண்டும் என்பது சத்தியமாக நம் விருப்பமல்ல. ஆனால் இந்தக் கோயிலின் தொன்மையும், இங்கு வசித்த ஆதித் தமிழர்கள் நாகரீகமும் வரலாற்றில் முறையாகப் பதியப்பட வேண்டும் என்பதுதான் நம் ஆசை!
-என்வழி ஸ்பெஷல்
படங்கள்: ஜான்

No comments:
Post a Comment