Sunday, 17 February 2013

பூரணமதுவிலக்கை அமல்படுத்தி நாளை நடைபயணம் தொடங்குகிறார் வைகோ

சென்னை: தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடைபயணத்தை தொடங்குகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி நெல் மாவட்டம் உவரியிலிருந்து மதுரை வரை வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் தொடங்கி மறைமலை நகர் வரை மொத்தம் 11 நாட்களுக்கு 250 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்கிறார்.
நாளை கோவளத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் விழாவில் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் விழா நடைபெறுகிறது. துணைப் பொதுச்செயலாளர் மல்லை. சத்யா, கழகப் பொருளாளர் டாக்டர். ரா. மாசிலாமணி, நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினர் பங்கேற்கின்றனர்.
இந்த நடைபயணம் கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், புதுப்பட்டிணம், திருக்கழுங்குன்றம், ஊர்களின் வழியாக சென்று 28ம் தேதி மறைமலை நகரில் நிறைவடைகிறது. அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார்.
இன்னும் இரண்டு நடைபயணம்
இதேபோன்று ஏப்ரல் 9ந் தேதி பொள்ளாச்சியில் தொடங்கி 20ந் தேதி ஈரோடு வரைக்கும், ஜூன் மாதம் 20-ந் தேதி விழுப்புரத்தில் தொடங்கி 30ந் தேதி கடலூர் வரைக்கும் இரண்டு கட்டமாக நடைபயணம் மேற்கொள்கிறார் வைகோ

No comments:

Post a Comment